தேசிய அடையாள அட்டை இல்லமையினால் தாக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் பதிவான சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த குழு பொறுப்பில் இருந்த உப பொலிஸ் பரிசோதகரும் இதற்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வகையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க காலி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலிஸ் காவலில் உள்ள தனது தந்தைக்கு பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி இளைஞர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் குழப்பமான முறையில் நடந்துகொள்ளும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
இதற்கிடையில், குறித்த காணொளியில் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ள நபர் போதையில் வீதியில் ஒழுக்கமற்ற முறையில் நடமாடியமையால், அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தமிழ் பிளஸ் செய்திப்பிரிவிற்கு அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நபர் போதை விழுந்தமையினாலேயே இரத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சையையும் பொலிஸாரே பெற்றுக்கொடுத்ததாகவும் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
