வவுனியா, மடுகந்தை – மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்து, 51 வயதுடைய பெண்ணை தாக்கி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், பெருமளவான சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வீட்டில் இருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரான பெண்ணை கட்டுப்படுத்தி, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையிட்டதுடன், அவரிடம் பாலியல் வன்கொடுமை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அத்துடன், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களும் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு கிடைத்ததையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் முதற்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகன ஆவணங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களும், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
