பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பிரபல அசோக் தாம் ஆலயத்தில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி குறைந்தது 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு, அசோக் தாம் ஆலயத்தில் சிவபெருமானை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, மின்கம்பி தொடர்பான அச்சம் பக்தர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கூட்ட நெரிசல் அதிகரித்து, தடுப்புகள் உடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் உடனடியாக லக்கிசராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நெரிசலுக்கான முழுமையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
