வைகறை முத்தமிழ் கலாச்சார அமைப்பும் Kesh Film Factory நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘மித்ரா’ மற்றும் ‘பைத்தியர் வைத்தியர்’ ஆகிய இரு புதிய திரைப்படங்களின் தொடக்கப் பூஜைகள் கொழும்பு, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் இன்று (17) வெகுவிமர்சையாக நடைபெற்று இனிதே நிறைவடைந்தன.
இவ்விழாவில் கலை, ஊடகம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் திரையுலகக் கலைஞர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன், ஊடகவியலாளர் ஈஸ்வரலிங்கம், இலங்கை M.G.R. ரவீந்திரன், சங்கவி பிலிம்ஸ் தலைவர் சங்கவி சுரேஷ், DNA அமைப்பின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான நவ்ஷாட், இசையமைப்பாளர் தவராஜ், நடன இயக்குநர் செல்வின் ஜப்பார், பாடகி அருணா, ராஜ் கார்மண்ட்ஸ் நிறுவனர் ஷண். ஈஸ்வர பிரசாத், தயாரிப்பாளர் உபைதுல்லா, நடிகை சாமிளா, சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் குணசேகரன் மற்றும் படத்தில் நடிக்கும் ஏனைய கலைஞர்களும் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.
வைகறை முத்தமிழ் கலாச்சார அமைப்பின் தயாரிப்பில், முகமது ரில்வான் தயாரித்து, கதை மற்றும் உரையாடல் எழுதி வழங்கும் 'மித்ரா' (MITHRA) திரைப்படத்தின் முன்னோட்டம் (Pilot Movie) மற்றும் முதல் பார்வை (First Look) விரைவில் வெளியாகவுள்ளது. பெனடிக் மார்கிரெட் (Benedic Magret) இயக்கும் இத்திரைப்படத்திற்கு மோசஸ் ஹாரிசன் (Moses Harison) திரைக்கதை அமைத்துள்ளதுடன், கேசவன் திருவாய்மொழி ஒளிப்பதிவுப் பணியையும், Kesh Film Factory படத்தொகுப்புப் பணியையும் மேற்கொள்கின்றனர்.
இத்திரைப்படத்தில் பெனடிக் மார்கிரெட், கேசவன் திருவாய்மொழி, மோசஸ் ஹாரிசன், ராஜா நிரோஷனி, மிகிந்தி யுமேன்சா, விஜயகுமார் திலுக்சன், மரியசாமி சத்தியவேல், சிவயோகினி யுவன் சங்கர் ராஜ், சங்கரலிங்கம் சிவயோகினி, காளிதாசன் கவிஷ்கா, ராமையா ராஜேஷ், கோவிந்தசாமி குணசேகரன் மற்றும் ஷைனி செஹான்சா உள்ளிட்ட பலர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், உதவி ஒளிப்பதிவுப் பணிகளை மோசஸ் ஹாரிசன், விஜயகுமார் திலுக்சன் மற்றும் ஆறுமுகம் கவிஷ்கா ஆகியோரும், ஒப்பனைப் பணியை பார்த்திபன் நிரோஷனியும் கவனித்து வருகின்றனர்.
நிகழ்வின் நிறைவில், தங்களின் அழைப்பை ஏற்று வருகை தந்து வாழ்த்திய அனைத்துப் பிரமுகர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் வைகறை முத்தமிழ் கலாச்சார அமைப்பு மற்றும் Kesh Film Factory சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.




