நீதித்துறையை அரசியலமைப்பிற்குள் முடக்க அரசாங்கம் முயற்சி: ஹர்ஷன ராஜகருணா குற்றச்சாட்டு

நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்து, நீதித்துறையைத் தனது அரசியல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமைப் பீடத்திலிருந்து பாரிய சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நிர்வாகமும் தீர்மானங்களும் பாராளுமன்றத்தின் ஊடாக எடுக்கப்படுகின்றதா அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சித் தலைமையகத்திலிருந்து இயங்குகின்றதா என்ற பாரிய சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் ஆகிய இரண்டையும் ஒரே மூடியில் குவிப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல அத்தியாவசியப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்காது, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இறங்கியுள்ளது.

 நீதித்துறையின் சுயாதீனத்தில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இந்தத் தலையீடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கங்கள், நீதிபதிகள் சங்கங்கள் மற்றும் உள்நாட்டிலுள்ள சட்டத்தரணிகள், நீதிபதிகள் சங்கங்கள் அடங்கலாக மகாநாயக்க தேரர்களும் தமது பலத்த எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர். இருப்பினும், மகாநாயக்க தேரர்களையும் ஏமாற்றி அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கிறது.

அரசாங்கம் முன்வைத்துள்ள 22 ஆவது திருத்தச் சட்ட மூலமானது வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக எனக்கூறப்பட்டாலும், அதனால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. இதன் உண்மையான நோக்கம் நீதித்துறையைத் தன்வயப்படுத்தி, மக்கள் விடுதலை முன்னணிக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதே ஆகும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னர், அதுகுறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் நேரம் கோரியிருந்தது. 

ஆனால், அவ்வாறானதொரு வாய்ப்பை வழங்காது, யோசனையை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களைச் சந்தித்துப் பேச அழைத்துள்ளார். 

இது ஒரு வெறும் நாடகமாகும். மேலும், இந்தச் சந்திப்பின் போது சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கருத்துக்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, ஜனாதிபதி பேசிய விடயங்கள் மாத்திரமே தமக்குச் சாதகமாகத் தொகுக்கப்பட்டு ஊடகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் ஊடகத் தர்மமின்மையையே வெளிப்படுத்துகிறது.

நீதிபதிகள் பற்றாக்குறைக்கு புதிய நியமனங்களை வழங்காததற்கு வழக்குகள் குறைவாக உள்ளதாக ஜனாதிபதி கூறுவது நீதித்துறைக்கே இழைக்கப்படும் அவமானமாகும். 

நீதித்துறைக்கு அழுத்தங்களை வழங்கி ஜனநாயகத்தை மீறும் பட்சத்தில், சர்வதேசத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளின் எதிர்ப்பினால் நாட்டிற்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் அபாயமும் உள்ளது. 

22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாடு சர்வதேச ரீதியில் மீள முடியாத பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.

அத்துடன், கன்டெய்னர்கள் காணாமல்போன சம்பவம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி, திறைசேரியிலிருந்து பெருந்தொகை டொலர்கள் மாயமானமை மற்றும் சிறைச்சாலை மோதல்கள் போன்ற எந்தவொரு முறைகேடுகளுக்கும் அரசாங்கம் இதுவரை பொறுப்பேற்கவோ, விசாரணைகளை நடத்தவோ இல்லை.

நாடு முழுவதும் எதிர்க்கும் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டுவர அவசரம் காட்டும் அரசாங்கம், மக்கள் எதிர்பார்க்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. 

இந்திய அரசாங்கம் வலியுறுத்தும் வரை காத்திருக்காமல், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

Post a Comment