நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, பொலிஸ் பாதுகாப்புடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற சம்மாந்துறை நீதிவான், நிலைமைகளை நேரில் அவதானித்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் பணித்துள்ளார்.
