தனது பதவிக் காலத்தில் வாகனங்கள் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தியது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மறுத்துள்ளார்.
சிறப்புத் தணிக்கை அறிக்கையின் கண்டுபிடிப்புகளை சில தரப்பினர் பொதுமக்களை திசைதிருப்புவதற்காகத் திரித்துக்கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அபேவர்தன தெரிவிக்கையில், 8வது மற்றும் 9வது நாடாளுமன்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தணிக்கையில் சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் தலைவர் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்றப் பதவிகள் தொடர்பான எரிபொருள் ஒதுக்கீடு, வாகனச் சலுகைகள் மற்றும் செலவினங்களில் பல முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியதாக முன்னதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதிலும், நாடாளுமன்றத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்களை மட்டுமே தான் பயன்படுத்தியதாகத் தணிக்கை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அபேவர்தனவின் கூற்றுப்படி, ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறையிலுள்ள அரசாங்க விதிகளுக்கு அமைவாகவே உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தனக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
மேலும், ஏதேனும் தவறு அல்லது முறைகேடுகள் நடந்ததற்கான சான்றுகள் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்புத் தணிக்கையானது 8வது மற்றும் 9வது நாடாளுமன்றங்களின் போது வாகனப் பயன்பாடு, எரிபொருள் நுகர்வு மற்றும் அது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்துள்ளது.
9வது நாடாளுமன்றத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில், சபாநாயகர் அலுவலகம் 2023 ஆம் ஆண்டில் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 3,994 லீற்றர் எரிபொருளையும், 2024 ஆம் ஆண்டில் மாதம் ஒன்றிற்கு 6,122 லீற்றர் எரிபொருளையும் பயன்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
