இலங்கையில் விமான நிலையப் பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
விமானம் தரையிறங்கும் மற்றும் புறப்படும் போது இவ்வாறான செயற்பாடுகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அது எச்சரித்துள்ளது.
விமான நிலையங்களின் அருகாமையில் பட்டம் பறக்கவிடுவது பயணிகள், விமானக் குழுவினர் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆபத்துக்குள்ளாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"அனைவரும் இணைந்து வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்போம்" என இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (AASL) நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்த்து, அதிலிருந்து தொலைவில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளில் மட்டுமே பட்டங்களை பறக்கவிடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சிறிய பொறுப்புணர்வான செயற்பாடுகளே பல உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், வானில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விமான நிலைய பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே, பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பட்டங்களை பறக்கவிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
