தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (2026 ஆகஸ்ட் 24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
தியவன்னா ஓயாவின் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்த (Rapid Action Boat Squadron) உயிர்காக்கும் குழுவினர், கிம்புலாவலவிற்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் பெண்ணொருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு மேற்கொண்ட அதிவேக அவசர மீட்பு நடவடிக்கையின் மூலம் அப்பெண் பாதுகாப்பாக நீரில் இருந்து மீட்கப்பட்டார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் நுகேகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



