தாயை பலியெடுத்த கும்பலின் மற்றுமொரு சூத்திரதாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பக்கோ சமன்' என்பவரின் தாயாரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பக்கோ சமன்' என்பவரின் தாயார் கடந்த 12ஆம் திகதி மித்தெனிய காவல்துறைப் பிரிவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய காவல்துறைப் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய மித்தெனியப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். 

இதன்போது, அவர் பக்கோ சமனின் தாயார் படுகொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை தெரியவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த சந்தேக நபர் நேற்று (23) வல்ஸ்முல்ல மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இக்கொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த மற்றைய சந்தேக நபர் நேற்று தங்ககாலை குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர் மித்தெனிய காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment