புகையிரத வீதியில் அமர்ந்த மக்கள் - 22 வயது இளைஞனின் கொடூர மரணம்

அளுத்கம காவல் துறை பிரிவுக்குட்பட்ட கனேகம புரானகம விகாரைக்கு அருகில் உள்ள டிப்போ புகையிரத கடவையில் நேற்று (23) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தினை அடுத்து அப்பகுதி மக்கள் புகையிரத பாதையை மறித்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு கேட் இல்லை என்றும், வர்ண சைகை அமைப்பு மற்றும் ஒலி எழுப்பும் கருவிகள் மட்டுமே செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியே பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வந்த போதிலும், அதிகார தரப்பினர் எத்தகைய தீர்வுகளையும் இதுவரை வழங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக கரையோர புகையிரத பாதையின் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு விரைந்த அளுத்கம காவல் நிலைய பொறுப்பதிகாரி, புகையிரத திணைக்கள அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஒரு வாரத்திற்குள் இச்சிரமத்திற்கு உரிய தீர்வு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார். 

அதனை ஏற்றுக்கொண்ட பிரதேசவாசிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது கரையோர புகையிரத பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

அளுத்கம பகுதியிலிருந்து தர்கா நகர் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, மருதானை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட 'சாகரிகா' கடுகதிப் புகையிரதத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற மீகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். 

படுகாயமடைந்த மற்றைய நபர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment