கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, சட்டமா அதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன், ஜெயந்தன் என அழைக்கப்படும் கதிர்காமத்தம்பி ஜெயகிஷன், ஜெயகாந்தன் என அழைக்கப்படும் நிமல் தேவ்சுகன் மற்றும் சீம்பு என அழைக்கப்படும் நடராஜா நகுலேந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பேசுபொருளாக இருந்து வரும் இந்த வழக்கில், தற்போது முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
