களனி ஆற்றில் நீர் பெற்றுக்கொள்ளப்படும் (Intake) பகுதியில் நீரின் தரத்தில் ஏற்பட்ட திடீர் அவசர நிலைமை காரணமாக, அசம்பாவித மேலாண்மை மையத்தின் அறிவித்தலுக்கு அமைவாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பத்தலே மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
எனினும், முப்படையினரின் ஒத்துழைப்புடன் களனி ஆற்று நீரின் தரத்தில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அசம்பாவித மேலாண்மை மையத்தின் பரிந்துரையின்படி நீர் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நீரின் தரம் உரிய தரநிலைகளுக்கு உட்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, பத்தரமுல்ல, கோட்டே, பாமன்கடை மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்புவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.
நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அவசர நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1939 என்ற 24 மணிநேர கட்டணமில்லா இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.
