தமிழர் பகுதியை உலுக்கிய விபத்து தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

 

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரம் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீதும் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

 

நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில், மேலும் 6 பேர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நேற்று இரவு 9.21 மணியளவில், கோட்டைக்கல்லாறில் 4 இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு - கொட்டாக்கல்லாறு வீதியில் பயணித்துள்ளனர். 

 

கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

 

விபத்துக்குள்ளான ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியைக் கடக்க நின்ற மூன்று மாணவர்கள் மீது மோதியுள்ளது.

 

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 3 மாணவர்கள், மேலதிக வகுப்புகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

 

பலத்த காயமடைந்த ஒரு சிறுமியின் ஒரு கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்த விபத்தில் 18 வயதுடைய கிஷோன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 17 வயதுடைய கதிசன் என்ற சிறுவனும் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Post a Comment