சிகிரியாவில் நள்ளிரவில் நடந்தது என்ன?... ஹேமர் இயந்திரத்துடன் சிக்கிய மூவர்!

சிகிரியா பாறையை அண்மித்த அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில், நள்ளிரவு வேளையில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிகிரியா வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிகிரியா சரணாலயத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சிகிரியா வனவிலங்கு அலுவலக பிரதானியும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளருமான எஸ்.எஸ். மலிந்தவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தியபோது, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமானது எனக் குறிப்பிடும் வகையில் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அப்பகுதியில் மூவர் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருப்பதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர். இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

விசாரணையில், தாங்கள் தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் ஊழியர்கள் என்றும், அருகிலுள்ள வீடொன்றுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்காகவே அந்த இடத்தில் தோண்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நள்ளிரவு வேளையில் எவ்வாறு நீர் இணைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர்கள் உரிய விளக்கத்தை வழங்க முடியவில்லை.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து பாறைகளைத் துளையிட பயன்படுத்தப்படும் ஹேமர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் தம்புள்ளை நீர் வழங்கல் வாரியத்தில் பணிபுரிபவர்கள் என்றும், மற்றையவர் குறித்த காணியின் உரிமையாளர் என்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் எஸ்.எஸ். மலிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் குழுவினர் இதற்கு முன்னரும் வேறு பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்த ஹேமர் இயந்திரத்தின் முனைப்பகுதி தேய்ந்த நிலையில் காணப்பட்டதுடன், ஏற்கனவே ஏதேனும் பாறை அல்லது வேறு இடத்தில் கடுமையாக தோண்டும் பணியில் அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், அவர்களது முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி தம்புள்ளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

Post a Comment