மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமா? பிறந்த குழந்தையோடு பரிதாபமாக உயிரி*ந்த 25 வயது தாய்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 'என்னை இங்கிருந்து காப்பாற்றுங்கள், மருத்துவமனை ஊழியர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்' எனக் கதறிய கர்ப்பிணிப் பெண், பிரசவித்த சில மணி நேரங்களிலேயே குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான கல்பனா என்ற பெண், தனது முதல் பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தனக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் அவர் அழுதுகொண்டே பதிவு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெஞ்சைப் பிழியும் வகையில் பரவி வருகிறது.

பிரசவத்தின் போது பிறந்த பச்சிளம் குழந்தையும், அடுத்த சில மணி நேரங்களில் கல்பனாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தவறான மயக்க மருந்து அளவே தனது மகளின் மரணத்திற்கு காரணம் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்பனாவின் தந்தை கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், மருத்துவக் குறைபாடுகள் எதுவும் நடக்கவில்லை என மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இச்சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Post a Comment