பளை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கிராயன்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக தெரிவித்து சமூக ஊடங்களில் நபர் ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டமையால் 46 வயதுடைய பெல்லன்வில பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த காணொளியில் உள்ள இடம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவின் கண்ணகிபுரம் மேற்கு, முக்கம்பன் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், அங்கு வெடிபொருள் உற்பத்தி, குண்டு தயாரிப்பு அல்லது வேறு சட்டவிரோத செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த இடத்தில் சட்டவிரோதமாக காடழிப்பு மற்றும் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பான விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளமையால், அது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று 19 ஆம் திகதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
