சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, ஆசியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் முன்னிலையில் திகழ்வதை சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், மலையக இளைஞர், யுவதிகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் நவீன திறன்கள் தொடர்பில் பயிற்சிகளை வழங்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்திற்கொண்டு, சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் வருகை தர ஊக்குவிக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.
அத்துடன், டித்வா புயலின்போது இலங்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இலங்கையின் காவல்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூர் அமைச்சர் கே. சண்முகம் இலங்கைக்கு வருகை தந்ததையும் செந்தில் தொண்டமான் இதன்போது நினைவுகூர்ந்தார்.
