பண்டத்தரிப்பு ஆலயத்திருவிழாவில் பங்கேற்று லேசர் ஒளிக்கீற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ நிபுணர் மருத்துவர் மலரவன் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
குறித்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்;ற நிலையில், சற்று முன்னர் இந்த அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்களில் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கண்களை தேய்த்தல், சுய மருந்துகளை பயன்படுத்துதல், ஆகிய செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார.
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் மருத்துவ நிபுணர் மருத்துவர் மலரவன் அறிவுறுத்தியுள்ளார்.
