முன்னாள் நிதியமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சோதனை

தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக, ஒப்பந்த அடிப்படையில் ஐந்து அதிகாரிகளை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட ஊழியர்களாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக அவர் இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்ட நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் மூன்று முறை அழைக்கப்பட்டபோதிலும், பல்வேறு காரணங்களைக் கூறி ரவி கருணாநாயக்க ஆணைக்குழுவில் ஆஜராகத் தவறினார். ஜூலை 16: அவர் முதன்முறையாக இலஞ்ச ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டார். ஜூலை 30: மீண்டும் அழைக்கப்பட்டபோது, தனது மகளின் திருமணம் நடைபெறவுள்ளதால் ஆஜராக முடியாது என ஆணைக்குழுவிற்குத் தெரிவித்தார். ஓகஸ்ட் 28 ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், தனது சட்டத்தரணி வருகை தர முடியாத சூழல் நிலவுவதாக ஆணைக்குழுவிற்கு அறிவித்தார். நேற்று மீண்டும் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையிலும், அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகத் தவறினார். இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை பத்தரமுல்லை, ராஜமல்வத்தை வீதியிலுள்ள அவரது வீட்டிற்குச் வீட்டில்இல்லாததால், அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். தொடர்ச்சியாக ஆணைக்குழுவில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் கீழ், தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கடந்த ஜூன் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Post a Comment