அம்பாறையில் தொல்பொருள் சின்னங்களைத் தேடி சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் தமானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், தமானை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு (09) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகமிட்டியாவ பகுதியில், சந்தேகநபர் சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் வெயாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தமானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
