அரசாங்கத்தால் ஒரு சிறைச்சாலையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாது-ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கத்தின் சீர்கேடான நிர்வாகத்தையும் நாட்டின் தற்போதைய நிலையையும் கடுமையாக விமர்சித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்... 

"ஒரு சிறைச்சாலையைக் கூட ஒழுங்காகக் கட்டுப்படுத்த முடியாத இந்த அரசாங்கம், எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்பப் போகிறது? அரசாங்கத்திடம் வெறும் வீண் பேச்சுக்கள்  மட்டுமே எஞ்சியுள்ளன.

 தேசிய பாதுகாப்பு குறித்து இவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமானால், இவர்களை எம்மிடம் வாருங்கள் என்றே கூற வேண்டியுள்ளது.

நடக்கும் அசம்பாவிதங்களுக்கு எதிர்க்கட்சியின் மீது குற்றஞ்சாட்டி, இது எதிர்க்கட்சியின் சதி என்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே இது அரசாங்கத்தின் சதித்திட்டம் என்றே நாங்கள் கூறுகிறோம். 

இன்று நாட்டின் அனைத்து இடங்களிலும் பிரச்சினைகள் மலிந்து காணப்படுகின்றன; மக்கள் வாழ முடியாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பாராளுமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதால், அரசாங்கத்தினர் அங்கு வந்து பொய்களைக் கூறிவிட்டுச் செல்கிறார்கள்.

நீதி அமைச்சரின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தோம். 

ஆனால், 159 வாக்குகள் அளித்து அவரை வெற்றி பெறச் செய்தார்கள். இப்போது அவருக்கு வாக்களித்தவர்கள் என்ன நினைக்கிறார்கள்? மனசாட்சியின் படி பார்த்தால், உண்மையிலேயே நீதி அமைச்சர் தோற்றுவிட்டார் அல்லவா?

எனவே, இனியாவது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த வேலையைச் சரியாகச் செய்யக்கூடிய ஒருவரிடம் பொறுப்பைக் கையளிக்க வேண்டும்." என்றார்...

Post a Comment