நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடித் தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் பிரதேச செயலகத்தின் மேலும் மூன்று அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மேலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கமலத், ஹற்றன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளரால் ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரு பெண்கள் ஹற்றன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமக்குரிய அஸ்வசும கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை எனப் பயனாளிகளால் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோனிடம் சமர்ப்பிக்கப்பட்ட அனாமேதய கடிதம் ஒன்றின் அடிப்படையிலேயே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளும் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நுவரெலியா மாவட்டச் செயலகம் மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வுப் பிரிவு அதிகாரிகளைக் கொண்ட 10 பேர் கொண்ட குழுவினால் 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு விசாரணையில் இம்மோசடி அம்பலமானது.

தற்போது கணக்காய்வு அதிகாரிகள் பிரதேச செயலகத்திலேயே தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர்கள், அஸ்வசும பிரிவு அதிகாரிகள் மற்றும் பயனாளிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அஸ்வசும பணம் கிடைக்காத பயனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தபோது, பணம் வந்திருந்தால் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருக்கும், மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனக் கூறி சந்தேகநபர்கள் தம்மை மிரட்டியதாகப் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள், அஸ்வெசும நிதியை முதற்கட்டமாக தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், அந்தத் தொகையை தங்களது சொந்தப் பணத்திலிருந்து வழங்கும் வட்டியில்லா கடன் எனக் கூறி அவர்களிடம் வழங்கியுள்ளனர். பின்னர், முன்கூட்டியே செய்யப்பட்ட உடன்பாட்டின்படி, மாதாந்திர தவணைகளாக வட்டியின்றி அதே தொகையை மீண்டும் தங்களிடம் செலுத்துமாறு கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Post a Comment