இன்றைய தினம் (24) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்தார்.
பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத்திறனையும் சுய சிந்தனையையும் முடக்கியுள்ள நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்கு தீர்வு காணும் புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல், மின்சாரம் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற மாபெரும் கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தால் உருவாக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க உணர்வுடன் சிக்கல்களுக்கு தீர்வுகாணவும் வழிவகுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் பணிப் சுமையைக் குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் தனது உறுதியான கருத்தைப் பதிவு செய்தார்.
19-ஆம் நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது என்றும், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், திரும்பத் திரும்பச் செய்யப்படும் வழக்கமான பணிகளை AI எளிதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்பதால், AI-ஆல் ஈடுசெய்ய முடியாத மனிதர்களின் படைப்பாற்றல் (Creativity), சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் திறன் மற்றும் உணர்வுப்பூர்வமான பிணைப்புகள் மட்டுமே எதிர்கால சமூகத்தில் முதன்மை பெறும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கை இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு உள்நாட்டு தொழில்முனைவோர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வு தரும் வணிக உத்திகளை உருவாக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் இலங்கை இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர்கள் சர்வதேச அறிவு மற்றும் உலகளாவிய நெட்வொர்க்குகளின் தொடர்பைப் பெறத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதி அளித்தார்.
