பூக்கெட்-டெல்லி ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி சரிவு: 17 பேர் காயம் - விசாரணை தொடங்கியது

 

தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடுமையான வானிலை மாற்றத்தை சந்தித்து திடீரென 300 அடி உயரம் கீழே சரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?

ஆகஸ்ட் 4-ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் விமானம் திடீரென குலுங்கியதில் 4 விமான பணியாளர்கள் உட்பட மொத்தம் 17 பேர் முதுகெலும்பு மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

விமானி போதைப்பொருள் சோதனை சர்சை

இதற்கிடையில், விமானத்தை இயக்கிய விமானிக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் அவர் தோல்வியடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இது குறித்து விளக்கமளித்த டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், "விமானிகளுக்கான பிந்தைய பரிசோதனைகள் DGCA விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டன" என்று தெரிவித்தது. 

ஆனால் சம்பந்தப்பட்ட சோதனையின் முடிவுகள் தங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பகிரப்படவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது. DGCA வழிகாட்டுதலின்படி ஊழியர்களுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

 விமானப் பணியாளர்களுக்கு பாராட்டு

இதற்கிடையே, விபத்து ஏற்பட்ட பிறகும் மீதமுள்ள ஒரு மணி நேர பயணத்தின் போது பயணிகளுக்கு தைரியமாகவும் சிறப்பாகவும் உதவிய விமான பணியாளர்களின் துணிச்சலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு பாராட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.


Post a Comment