ஜனநாயக கொங்கோ குடியரசில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2325 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான எபோலா பரவலாக இது பதிவாகியுள்ளது.
2018 முதல் 2020 வரை ஏற்பட்ட எபோலா பரவலில் 2299 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போதைய அலையில் அந்த எண்ணிக்கையும் முறியடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இதுவரை 4945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 101 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிதிட்ட அதிகாரி டொம் பிளெட்சர் இது குறித்து எச்சரித்துள்ளார். எபோலா கட்டுப்பாடுகளை மீறி வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச சமூகத்தின் உடனடி ஒத்துழைப்பு தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முறை பரவும் புண்டிக்புஜோ வகை எபோலாவிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
அத்துடன் பலவீனமான சுகாதார கட்டமைப்பு, எல்லை பகுதிகளில் நடக்கும் ஆயுத மோதல்கள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் நோய் தடுப்பு பணிகளுக்கு பெரும் தடையாக உள்ளன.
ஆரம்பத்தில் 20 சதவீதமாக இருந்த மரண விகிதம் தற்போது 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது தொற்று ஏற்படும் இருவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய பரவல் வேகம் இப்படியே தொடர்ந்தால் 2014 முதல் 2016 வரை மேற்கு ஆபிரிக்காவில் ஏற்பட்ட பேரழிவையும் இது தாண்டிவிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
