சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, தனது கணவரின் கடுமையான இதயக் கோளாறைக் கருத்தில் கொண்டு, அவரை குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஓகஸ்ட் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
தேசிய வைத்தியசாலையின் மருத்துவப் பராமரிப்பில் இருந்து தனது கணவரை அகற்றி, மீண்டும் குற்றப்புலனாய்வுத் துறையின் பொறுப்பில் ஒப்படைக்க முயற்சித்தால், அது அவரது உயிருக்கு உடனடி மற்றும் கடுமையான ஆபத்தை விளைவிக்கும்.
தொடர்ச்சியான தடுத்து வைப்பு மற்றும் சிறை நிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுரேஷ் சலே உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டதை அடுத்து, ஜூன் 7, 2026 அன்று அவர் இலங்கை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றிலிருந்து அவர் இதயவியல் நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதயச் செயல்பாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான பின்னடைவு காரணமாக, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இதயத்தில் தானியங்கி 'பேஸ்மேக்கர்' (Pacemaker) சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், அவருக்கு நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு அவசியமாகிறது.
தடுத்து வைக்கும் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்றும், தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியான பிறகு அதனை மீண்டும் புதுப்பிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
எந்தவொரு சட்டபூர்வமான விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கும் நோக்கம் தமக்கோ அல்லது தமது குடும்பத்தினருக்கோ இல்லை என்றும், சட்டப்படி நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மனோரி சலே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
