இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்கா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக கடந்த ஒரு மாதமாக குளத்து நீரிலேயே தங்கியிருக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இக்பால் என்ற அந்த சிறுவன் நீரில் இருந்து வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை பிடித்துள்ளதாக உணர்வதாகவும் கூறியுள்ளான்.
இதனால் அவன் குளத்தை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து நீரிலேயே இருந்து வருகிறான். உடல் பருமனாக காணப்படும் இக்பால் காலை முதல் இரவு வரை குளங்களில் மிதந்தபடி இருக்கிறான். சில நேரங்களில் ஒரு குளத்தில் இருந்து மற்றொரு நீர் நிலைக்கும் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் நிலை குறித்து பெற்றோர் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவனது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.
நீண்ட நாட்களாக தண்ணீரிலேயே இருப்பதால் இக்பாலின் கை கால்களில் உள்ள தோல் வெளுத்து போயுள்ளது. இருந்தும் அவன் நீரை விட்டு வெளியே வர மறுக்கிறான்.
இது குறித்து கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில் நீண்ட நேரம் நீரில் இருப்பதால் தோலின் கீழ் பூஞ்சை தொற்று உள்ளிட்ட பல்வேறு தீவிர உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளனர்.
