கையடக்கதொலைபேசி கிடைக்கவில்லை என்ற மனவேதனையில் 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

பதுளை மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பகுதியில் கையடக்கதொலைபேசி கிடைக்காத விரக்தியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இம்முறை கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யட்டிநுவர திடீர் மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன மாணவியின் மரணம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு வந்ததும் மகள் எப்போதும் கையடக்கதொலைபேசியுடனேயே இருப்பதாக மாணவியின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். கல்வி பாதிக்கப்படுவதால் இது குறித்து அடிக்கடி அவர் மகளுக்கு அறிவுரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று மகள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது தந்தை அதனை பறித்து வைத்து விட்டு தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது மகள் அறைக்குள் சென்று தூக்கிட்டு கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த மாணவி கல்வியில் மிகவும் திறமையானவர் எனவும் பரீட்சைகளில் எப்போதும் வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாம் இடத்தை பெற்று வந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Post a Comment