யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ஊர்காவற்றுறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு பரிந்துரைத்துள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 07.08.2026 விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் தரப்பு சட்டத்தரணிகள் விசாரணையை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து, நீதிமன்றம் விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன்படி 2 பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ். குற்ற விசாரணை பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை செப்டம்பர் 4ஆம் திகதி அழைத்து ஆரம்ப விசாரணை நடத்துமாறும், அழைப்புக் கட்டளைகளை உடனே அனுப்புமாறும் நீதிமன்றம் பணித்தது.
வேலணை அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் பொலிஸாரின் நிறுத்த உத்தரவை ஹைஏஸ் வாகனம் மீறியதை அடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தை செலுத்திய 17 வயது சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
