13 பேரும் அமரவேண்டும் - அனைத்து மனுக்களும் இன்று விசாரிக்கப்படும்

 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் தொடர்பில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய நேற்று (31) வரை அதற்கு காலம் வழங்கப்பட்டிருந்ததுடன், இச்சட்டமூலமானது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் தீங்கு விளைவிப்பதாகவும், அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்வதாகப் பிரகடனப்படுத்துமாறும், மேலும் இச்சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன  வாக்கெடுப்புக்கு உட்படுத்துமாறு கோரியும் சாதகமாகவும் பாதகமாகவும் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலனை செய்வதற்காகத் தலைமை நீதிபதியால் நேற்று ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவிக்கப்பட்டதுடன், தலைமை நீதிபதிக்குப் புறம்பாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் அதற்காகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இன்று காலை 10 மணிமுதல் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

எவ்வாறாயினும், மனு விசாரணை ஆரம்பமாகும்போதே, குறித்த மனுக்களைப் பரிசீலனை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் 13 நீதிபதிகளும் ஆசனத்தில் அமர வேண்டும் என்ற விடயத்தை முன்வைக்கத் தயாராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலனை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் 13 நீதிபதிகளும் அமர வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட மனுதாரர் தரப்பினர் கோரியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதற்கமைய, இன்று காலை மனுப் பரிசீலனை ஆரம்பமாகும்போதே அனைத்து மனுதாரர் தரப்பினரும் அது குறித்த விடயங்களை முன்வைக்கத் தயாராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment