O/L பரீட்சை முடிவுகள் பெற்ற மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

 

2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. 

கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, "Our Services" (எமது சேவைகள்) என்பதன் கீழ் உள்ள "Exam Information Centre" ஐ அழுத்துவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும். 

கணினிக் கட்டமைப்புக்குள் நுழையும் போது, ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். புதிய பயனர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும். 

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், பொதுவான வழிகாட்டல்களை வாசிப்பதும், அறிவுறுத்தல் காணொளியைப் பார்ப்பதும் விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதது என பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. 

ஒரு பாடத்திற்கான மறுசீலனைக் கட்டணம் ரூ. 200 ஆகும் என்பதுடன், இக்கட்டணத்தை கடன் அட்டை (Credit Card), வரவு அட்டை (Debit Card) அல்லது தபாலகங்கள் மூலம் செலுத்த முடியும். 

கட்டணத்தைச் செலுத்திய பின்னர் விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுடன், இது தொடர்பான குறுஞ்செய்தி (SMS) அறிவித்தலொன்றும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இணையவழியில் (Online) ஒரு முறை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், கட்டணம் செலுத்திய பின்னர் பணம் மீண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது. 

மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது 0112 785 231 உள்ளிட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு வினவல்களை மேற்கொள்ள முடியும்.

Post a Comment