Posts

வானிலையில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்


நாட்டின் சில இடங்களில்  இன்று மழை பெய்யக்கூடும் என்றும், பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை காணப்படும்.

எனினும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடல் பகுதிகள் ஓரளவிற்கு கொந்தளிப்பாக இருக்கும்.

மேலும், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment