எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு பெரும் ஆபத்து: சஜித் அதிரடி நடவடிக்கை

 

எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடனான விசேட கலந்துரையாடலொன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் இன்று (05) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மெட்ரோ பொலிட்டன் விரிவுரையாளர் ஸ்ரீநாத் பெர்னாண்டோ, சுற்றாடல் நிபுணர் கலாநிதி ஸ்பென்சர் வித்தாரண, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதம பொருளாதார அதிகாரி ஹசிதா விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட சுற்றாடல் நிபுணர் நதீர ராஜபக்‌ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இங்கு வருகை தந்திருந்த நிபுணர்களின் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  கேட்டுக்கொண்டார். இந்த விடயங்களை காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, நாட்டின் கொள்கை நிகழ்ச்சி நிரலில் உள்வாங்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இத்தகைய கருத்துக்கள், தரவுகள் மற்றும் நிபுணத்துவ அறிவினால் விளக்கங்களை பெறுவதன் மூலம், நாட்டின் எதிர்காலம் குறித்து மேலும் பொறுப்புணர்வுடனும் பயனுள்ளதாகவும் முன்மொழிவுகளை முன்வைக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இந்த பிரச்சினைகளில் பொறுப்புணர்வுடனும் ஆக்கப்பூர்வமாகவும் தலையிட எதிர்பார்க்கிறோம் என்றும், காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக தாம் செயற்படுவதால், எதிர்காலத்திலும் இதுபோன்ற கலந்துரையாடல்களையும் அறிவுப் பகிர்வுகளையும் தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்துடன் இணைந்து செயல்படுமாறு இங்கு வருகை தந்திருந்த நிபுணர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து, எல் நினோ நிலைமை மற்றும் 'தெற்கு சுழற்சி' (ENSO) என அழைக்கப்படும் காலநிலை சுழற்சி பற்றிய விபரங்களை விளக்கிய எதிர்க்கட்சித் தலைவர், பசிபிக் பெருங்கடலின் நீரின் வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்த மாறுபாடுகள் காரணமாகவே இந்த நிலைமைகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்தார். எல் நினோ நிலையின் போது கடல் நீர் வழக்கத்தை விட அசாதாரணமாக வெப்பமடைகிறது என்றும், லா நினா நிலையின் போது அது வழமையை விட குளிர்ச்சியடைகிறது என்றும், இந்த மாற்றங்கள் உலகளாவிய வானிலை போக்குகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இத்தகைய காலநிலை மாற்றங்களால் வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள், உணவு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், 1982, 1997-1998 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ நிலைமைகள் காரணமாக சர்வதேச ரீதியாக பல பாரதூரமான காலநிலை நெருக்கடிகள் உருவானதை நினைவு கூர்ந்தார். 

இது தவிர, இம்முறை 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) நிலைமை ஏற்படுவது குறித்து வானிலை ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளதால், அவ்வாறு நிகழ்ந்தால் 2026 அல்லது 2027 ஆண்டுகளில் உலகளாவிய வெப்பநிலை மட்டம் குறிப்பிட்ட எல்லையை தாண்ட அல்லது எட்டக்கூடும் என கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன அவர் தெரிவித்தார்.

இந்த மோசமான வானிலை உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கலாம் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலக மக்களின் கலோரி தேவையில் சுமார் 60% ஐ பெற்றுத் தரும் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சோயா போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்து காணப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் உணவுப் பொருட்களின் விலைகள் கூடுவதற்கும், பணவீக்கம் அதிகரிப்பதற்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், காலநிலை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பெரும்பாலும் உட்கட்டமைப்பு, நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், அதற்காக போதிய தயார் நிலையையும், காலநிலை நெகிழ்ச்சித் திறனையும் (Climate Resilience) அதிகரித்துக் கொள்வது அத்தியாவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வருகை தந்திரிந்தோர் மத்தியில் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment