மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் வைத்து, கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிர்த்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று சனிக்கிழமை (25) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். அதிவேகமாகப் பயணித்த இரு வாகனங்களும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இருவருமாக மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியில் குடைசாய்ந்து பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
