குருநாகல் பகுதியில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் 100 ரூபாய் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, இந்த சம்பவம் கடந்த ஜூன் 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
வயம்ப டெக்' என்ற தொழிநுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று, பமுனுகெதர பகுதியில் தங்கியிருந்த 19 வயதுடைய இரண்டு மாணவர்கள், தங்களது தங்குமிடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் மாணவர்களிடம் 100 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அதனை அவர்கள் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, மாணவர்கள் இருவர் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காகக் குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 19, 24 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.
இவர்கள் கெபல்லவ, வீரம்புகெதர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாகக் கூடி, பலவந்தமாகப் பணம் பறிக்க முயன்றமை மற்றும் இருவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
