அம்பாறை மாவட்டத்தில் கார் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற சந்தேக நபர்களை, பொலிஸார் சினிமா பாணியில் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சம்பவம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸார் வருகையை அறிந்ததும், குறித்த வீட்டின் அருகில் இருந்த இருவர் காரில் தப்பிச் சென்றனர். அவர்களுக்கு வழிகாட்ட மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு சந்தேக நபரையும் பொலிஸார் முதலில் கைது செய்தனர்.
தப்பிச் சென்ற காரைத் துரத்திச் சென்ற பொலிஸ் பரிசோதகர், திரைப்பட பாணியில் தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி, தப்பிச் சென்ற காரின் மீது தலைக்கவசத்தை வீசி அதனை மறித்து தடுத்து நிறுத்தினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32, 33 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 5 கிராம் 370 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள், இரு கைத்தொலைபேசிகள், வங்கி அட்டைகள் மற்றும் ஒரு தொகை பணம் போன்றன கைப்பற்றப்பட்டது
சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைப்பதற்கு முன்னரே, பெருமளவிலான போதைப்பொருட்கள் பல விநியோகஸ்தர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி பொலிஸாருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
