தீவிரமடைந்து வரும் 'பாவி' புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் 'இண்டாய்' என்று அழைக்கப்படும் இந்த புயல், நாட்டின் மீது நேரடியாகக் கரையை கடக்காது என்ற போதிலும், அதன் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியான மிண்டனாவோ தீவின் சரங்கனி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் லானாவோ டெல் சூர் மாகாணத்தில் நிகழ்ந்த மற்றொரு நிலச்சரிவில் 5 பேர் பலியாகியுள்ளனர். புயலின் தீவிரத்தன்மை காரணமாகத் தலைநகர் மணிலா உட்படப் பல பகுதிகளில் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை ஆய்வு மையமான PAGASA விடுத்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளைச் சூறையாடிய இந்த சூப்பர் புயல், தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
