படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

 

கண்டியில் இளம் பெண்ணை கொலை செய்து வீட்டுக்கு அருகில் மண்ணில் புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் பெண்ணை கொலை செய்த நிலையில், சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியிருந்தார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், அவரது வீட்டுத் தோட்டத்தில் ஒளிந்திருந்த போது பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து ஒருவித நாற்றம் வீசியதால், அவர் விஷம் குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளம் பெண் காணாமல் போனமை தொடர்பாக சந்தேகநபரே பொலிஸில் செய்த முறைப்பாடு குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பாக அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, பெண்ணைத் தாக்கி கொலை செய்து, வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் புதைத்தமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய, ரங்கல பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று சேற்று நிலத்தைத் தோண்டிய போது, பெண்ணின் சடலம் சுமார் மூன்று அடி ஆழமான குழியில் இருந்து மீட்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட யுவதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய வாசனா சந்தமாலி வீரசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருமணமானவரான சந்தேகநபர், தனது மனைவியைப் பிரிந்து சுமார் நான்கு வருடங்களாக இந்த இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment