அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் சரிவைச் சந்தித்துள்ளன.
இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 77.51 டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 73.62 டொலராகவும் குறைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையின்படி, அடுத்த 60 நாட்களுக்கு ஈரானின் எண்ணெய் தொழில்துறை மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இஸ்ரேல் - லெபனான் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொறிமுறை குறித்தும் இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுமார் 6 மில்லியன் பீப்பாய் ஈரானிய மசகு எண்ணெயைச் சுமந்தவாறு குறைந்தது மூன்று அதிநவீன கப்பல்கள் (Supertankers), சிங்கப்பூரை நோக்கி ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணிப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் ஆரம்பமானதன் பின்னர், ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவிலான ஈரானிய எண்ணெய் திறந்த வெளியில் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தக் கப்பல்களின் நகர்வு, மசகு எண்ணெய் விநியோகம் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையை சந்தையில் ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், தற்போதைய போர்நிறுத்தச் சூழல் இன்னும் பலவீனமாகவே உள்ளதால், எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.