அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்பதை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த இடத்தில் மாலை 5.10 அளவிலேயே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாகச் செயற்பட்ட பிரதேசமக்களும், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
தீ ஏற்படும் போது, அந்த மையத்திற்குள் வெவ்வேறு வயதுடைய மனநல குறைபாடுகள் கொண்ட 70 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 52 பேரை அக்கம் பக்கத்தினரும் பொலிஸாரும் இணைந்து காயங்களின்றி மீட்டுள்ளனர்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 8 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பராமரிப்பு நிலையத்தில் முதியோர்களுடன் மனநலப் பிரச்சினைகள் உள்ள இளைஞர்களும் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பதுடன், உயிரிழந்தவர்களில் 17 வயதுடைய சிறுவன் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அங்கிருந்து காயங்களின்றி மீட்கப்பட்டவர்களை நேற்று இரவே படகொட ஆரம்பப் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீர் மோட்டார் மற்றும் அங்கிருந்த மல்டி பிளக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ பரவியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு அருகில் சுமார் 80 மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் தீப்பிடித்து பரவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில், படகொட ஆரம்பப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மீட்கப்பட்டவர்கள், இன்று காலை இராணுவத்தின் உதவியுடன் கல்பாத பகுதியிலுள்ள மற்றொரு பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், தீ விபத்துக்குள்ளான தடுப்பு மையத்தில் இருந்தவர்களின் உறவினர்களும் இன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அதற்கமைய தடுப்பு மையத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த தடுப்பு மையத்தின் பணிப்பாளராகச் செயற்பட்டு அதனை நடத்தி வந்த நபரை, எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
