புத்தளம், கரம்பை - உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் நேற்று (29) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர் .
புத்தளத்திலிருந்து கரம்பை ஊடாகக் கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் டிப்போக்குச் சொந்தமான பேருந்தும், பெருக்குவட்டானிலிருந்து மதுரங்குளி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது .
இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் உடனடியாகக் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர் .
உயிரிழந்தவர் கொத்தாந்தீவு, பெருக்குவட்டானைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார் .
உயிரிழந்தவரின் உடலத்தைப் பார்வையிட்ட புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைக்குப் பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் .
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
