நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
நேற்று மாலை 3:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து அருகில் இருந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது.
திடீரென ஏற்பட்ட இந்த சூறாவளித் தாக்கத்தினால் ஜெயந்திகம பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல குடும்பங்கள் தமது தங்குமிடங்களை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் உடமைகள் குறித்த விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அனர்த்த மேலாண்மை பிரிவினருக்கு வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை வவுனியாவில் காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுராநகர் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் மாலை மற்றும் நேற்று மாலை மழை செய்திருந்ததுடன் சில பகுதிகளில் காற்றும் வீசியிருந்தது.
இதன்போது ஆச்சிபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மதுரா நகர் பகுதியில் காணப்பட்ட அரை நிரந்தர மற்றும் தற்காலிக வீடுகளின் கூரைப்பகுதி வேலிகள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இதில் 4 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்ந்தும் அவ் வீடுகளிலேயே எந்தவித உதவியும் இன்றி வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
