உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணுக்கு அமைய, உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தில் எவ்வித தடையுமில்லை எனக் கூறிய அமைச்சர், புதிய ஒப்பந்தத்தின் கீழ் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
நாட்டில் எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், மாலைதீவில் உள்ள நிறுவனமொன்றின் வசதிகளே பயன்படுத்தப்படுவதாகவும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு எரிவாயு கொண்டு வரப்படுவதால் ஏற்படும் மேலதிக செலவுகளும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:
"பொதுவாக எல்.பி.ஜி எரிவாயு விலை சுட்டெண்ணில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சவுதி அரம்கோ சுட்டெண்ணின்படி ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 541.5 டொலராக இருந்தது. அது மார்ச் மாதத்தில் 787.50 டொலராக உயர்ந்துள்ளது. இது லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில் தற்போதைய உயர்வை விட அதிக விலையேற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை.
கடந்த காலங்களில் எமக்கு இருந்த பிரதான பிரச்சினை எரிபொருள் மற்றும் எரிவாயுவைச் சேமிப்பதற்கான வசதிகள் போதாமையாக இருந்தமையாகும். புதிய ஒப்பந்தத்தின்படி நாம் 'ஜியோ கேஸ்' நிறுவனத்திற்கு மாறியுள்ளோம். இதற்கு முன்னர் ஓமான் நிறுவனத்திடமே ஒப்பந்தம் இருந்தது. ஜியோ கேஸ் நிறுவனம் ஊடாக தற்போது மத்திய கிழக்கிலிருந்து அல்லாமல், அமெரிக்காவிலிருந்து 80 சதவீதமும், தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சதவீதமுமே எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த வழித்தடங்களில் பாரிய தடைகள் இல்லாததால் விநியோகத்தில் சிக்கல் இல்லை.
இலங்கையில் தற்போது பாரிய அளவில் எரிவாயுவைச் சேமிக்க இடமில்லை. எனவே, கப்பல் வந்து மாலைதீவு நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியத்தில் எரிவாயுவைச் சேமித்துவிட்டு, அங்கிருந்து சுமார் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்கென மேலதிக செலவு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் கப்பலிலிருந்து எரிவாயுவைச் சேமிக்க எமக்கு வசதி இருந்தால் இந்தச் செலவைக் குறைத்திருக்கலாம். எனவே, எரிவாயுவை நிரந்தரமாகச் சேமிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்."
