ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியத்தில் நேற்று (3) இரவு ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காபூலில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சிறுவன் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 177 கிலோமீட்டர் (110 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் தவிர, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதமும் அந்நாட்டில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)