மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நேற்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.


இதற்கமைய,நேற்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், 2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.


முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):

பேருந்துகள் : 60  
மோட்டார் சைக்கிள்கள்  : 5  
வேன்கள் : 40 
மோட்டார் வாகனங்கள் : 15 
மோட்டார் லொறிகள்: 200 
காணி வாகனங்கள் : 25
முச்சக்கர வண்டிகள்: 15 
விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 
குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5


நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.


தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.