நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் இயன்றவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால், நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"வறட்சியான காலநிலையுடன் நுகர்வோரின் நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே நீரை வழங்க முடியும். அம்பத்தலையில் நாளொன்றுக்கு 560,000 கனமீற்றர் நீரையும், லேபுகமையில் 150,000 கனமீற்றர் நீரையும் மட்டுமே எம்மால் உற்பத்தி செய்ய முடியும். அதற்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் எமக்கு இல்லை. தற்போது நாடு முழுவதும் அதிகபட்ச கொள்ளளவில் நீரை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறோம். இந்த வறட்சி நீடித்தால், அதிகரித்து வரும் தேவையுடன் நீர் வழங்கலில் சிரமங்கள் ஏற்படலாம்."
"நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துங்கள். பாவனையை நிறுத்தச் சொல்லவில்லை, ஆனால் வீடுகளில் பயன்படுத்தும்போது வீணாவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில், சில பிரதேசங்களில் உள்ள உயர்ந்த இடங்களுக்கும், நீர் குழாய்களின் இறுதிப் பகுதிகளுக்கும் நீர் அழுத்தம் குறையக்கூடும். குறைவழுத்த நிலையில் நீர் வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வறட்சி அதிகரித்தால் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும்."
இதேவேளை, ஆறுகளின் முகத்துவாரங்கள் ஊடாக உப்பு நீர் கலப்பது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மணல் அகழ்வு போன்ற மனிதச் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார்.
"ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடங்களில் உப்பு நீர் கலப்பது இப்போது ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மணல் அகழ்வு மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க நாம் உப்பு நீர் தடுப்புகளை அமைத்து வருகிறோம். தற்போது களனி ஆற்றை மையப்படுத்தி உப்பு நீர் தடுப்பு ஒன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என அவர் மேலும் தெரிவித்தார்.
.jpeg)