மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சொகுசு கார்கள் உட்பட பல வாகனங்கள் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களுக்காக அனுப்பப்பட்ட லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி உட்பட சுமார் 50 பயன்படுத்தப்பட்ட கார்கள் துபாயை அடைய முடியாமல், இலங்கை மற்றும் சீனாவில் இறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அத்தோடு, 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் கொண்ட மற்றொரு சரக்குக் கப்பலும் துபாய்க்கு செல்ல முடியாத காரணத்தால், அதில் இருந்த வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை அருகே ஏற்பட்ட பதற்றம் மற்றும் அதன் அருகிலுள்ள பாதைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக கப்பல் போக்குவரத்து சீர்குலைந்துள்ளதால் சரக்குகள் திசை மாற்றப்படுகின்றதாக ஜப்பான் மற்றும் தென் கொரியா ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இதனால் சேமிப்பு செலவு அதிகரித்து கால தாமதமும் உருவாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்கும் முக்கிய சந்தையாக உள்ளன.
தற்போதைய பதற்ற சூழ்நிலை காரணமாக கப்பல் போக்குவரத்தில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது, இதன் காரணமாக சில கப்பல்கள் தெற்காசியாவைச் சுற்றி குறிப்பாக இலங்கை அருகே காத்திருக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றன.
