பாணந்துறை - இரத்தினபுரி வீதியின் குளுபன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) முச்சக்கரவண்டி ஒன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்தவரின் மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஹிங்குராக்கொடை - கல்முனை வீதியின் 07ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
