மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலியாவின் இரண்டு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாண அதிகாரிகளினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை உயர்வால் எரிபொருளுக்காகச் செலவிட வேண்டிய தொகை அதிகரிப்பதன் மூலம், குடும்பச் செலவுகள் உயர்ந்து மக்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாணங்களில் வசிப்பவர்கள் ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். விக்டோரியா மாகாணத்தில் ஒரு மாத காலத்திற்கும், டாஸ்மேனியா மாகாணத்தில் நாளை (30) முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, பொதுமக்களைப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் ஒரு நோக்கமாகும் என சர்வதேச ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
.jpeg)